Sunday, April 1, 2018

கானல் நீர்...

இருக்கிற பிரச்சனை போதாதென்று இதை வேறு எதிர் கொள்ள வேண்டுமா? பெரும்பாலான நாட்களில் காணும் காட்சிதான். அன்றாடம் அலுவலகத்திற்கு ரயிலில் பயணிக்கும்போது  இந்த தொல்லைகள் குறைவதாயில்லை. இந்த நான்கைந்து பேர் கூட்டம் ஒரு பெரிய கட்சி கூட்டத்தை கூட சிதறி ஒடச் செய்துவிடும். அவர்கள் நெருங்கி கேட்டுக்கும்போது பணத்தை கொடுத்துவிட வேண்டும்; இல்லாவிட்டால் கொச்சை பேச்சுகளும், வசவுகளும், சாபங்களும், கண்ட இடத்தில தொடுவதும்... அப்பப்பா! இதற்கு பயந்தே நான் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து விடுவேன்.

கை தட்டி பணம் கேட்கும் இந்த திருநங்கைகள் ஒரு வித அச்சத்தை மனதுக்குள் விதைத்து விட்டார்கள்.  இன்றும் பணம் கேட்டு வருகிறார்கள். இவர்கள் நான் வசிக்கும் தெருவின் பின்புறம் உள்ள குடிசை பகுதியில்தான் வசிக்கிறார்கள். இரவு நேரங்களில் தெரு முனையில் இவர்களோடு தங்கி இருக்கும் வேறு சிலர் பளபளக்கும் புடவையில் மிகையான ஒப்பனையுடன் நிற்பதை பார்த்து இருக்கிறேன். இதனால் இவர்கள் மேலே இன்னும் கசப்பும் வெறுப்பும் அதிகமாகிறது. அதே  குடிசைப் பகுதியில் வசிக்கும் எங்கள் வீட்டு வேலை செய்யும் சாலம்மாவிடம் இவர்களைப்பற்றி கேட்டபோது, "பாவம் தம்பி! யார் பெத்த புள்ளைங்களோ... ஹ்ம்ம்.... இப்ப்டி சீரழியுதுங்க!" என்று பரிதாபப்பட்டபோது, 'யார் இப்படி சீரழிய சொன்னது? இவர்களேதானே இந்த வேலை செய்கிறார்கள்' என்று கூறத்தோன்றியது.

குறிப்பாக அந்த கூட்டத்தில் நந்தினி என்ற ஒரு திருநங்கை நட்போடு என்னை பார்த்து சிரிப்பது இன்னும் எரிச்சலை அதிகப்படுத்தும். எல்லாம் இந்த அம்மாவால் வந்த வினை! என்றோ ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது, தன்னை இடிக்க வந்த இருசக்கர வாகனத்தில் இருந்து காப்பாற்றிவிட்டாளாம்;  அதற்கு ஏக தடபுடல் செய்து, வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து, புடவை, பூ, பழம் என மரியாதை செய்து, அப்பப்பா! அன்றிலிருந்து இவள் பார்க்கும் போது சிரிப்பது நான் முகத்தை திருப்பிக்கொண்டு போவதும் அன்றாடமாகிவிட்டது. இதில் இவளுக்கு ஒரு வேலை தேடித்தர அம்மா பரிந்துரைத்தது இன்னும் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே அலுவலகத்தில் நடந்த பிரச்சனைகளால் மனம் பெரும் உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது. சென்ற மாதம் அந்த தொழிற் சங்க தலைவர் காதர் மற்றும் அவனது சகாக்கள் மூன்று பேர், அலுவலக பணிப்பெண்ணிடம் முறை தவறி நடந்ததை ஒரு மேலாளராக எங்கள் முதலாளியிடம் கொண்டு சென்று, அந்த பெண்ணிடம் பேசி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செய்துவிட்டேன். இப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு, பனி நீக்கம் ஆனதற்கு  என்னை பழி வாங்க துடிப்பதாக மற்ற தொழிலாளிகள் மூலமாக கேள்விப்பட்டேன்.

இன்று ரயிலில் ஏறியதிலிருந்து தலை வலிக்கிறது. காதர் ஜாமினில் வந்துவிட்டதாக என்னுடைய சக அலுவலக நண்பர் குறுந்தகவல் அனுப்பி இருந்தார். என்னுடைய முதலாளி என்னை அலைபேசியில் அழைத்து அலுவலகம் வராமல் இரு நாட்கள் விடுப்பு எடுக்குமாறு கூறினார். அப்பாவும் வீட்டில் இருக்குமாறு கூறினார். கேவலம் இவர்களுக்காக நான் பயந்தால் என்னாவது? இவ்வளவு படித்து ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன் - அதற்கு என்ன அர்த்தம்? ஒரு கை பார்த்து விடலாம் என்று கிளம்பிவிட்டேன்.

வேலை பளுவில் எல்லாம் மறந்துவிட்டது. மாலை இருட்டிய பிறகே கிளம்பினேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையத்துக்கு வரும்போது இன்னும் அலுப்பு அதிகமாகவே இருந்தது. வீட்டிற்கு இன்னும் இருபது நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆட்டோவில் போகலாம் என்று தோன்ற அருகே நிறுத்தம் நோக்கி நடந்தேன். அப்போது அங்கே காத்திருந்த காதர் மற்றும் அவன் சகாக்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். கையில் இரும்புத் தடியுடன் நிற்கும் அவர்கள் என்னை நெருங்கும்போது வீதியில் ஆட்கள் இருந்தாலும் யாரும் அருகில் வரவில்லை. நான் மெல்ல ஓட எத்தனிக்க, அவர்களில் ஒருத்தன் என் மண்டையில் அடித்தான். தடுமாறி விழுந்த என்னை நோக்கி காதர் வருவது தெரிந்தது.

மெல்ல நினைவு வர, கண்களை திறக்க மிகவும் சிரமமாய் இருந்தது. வலி மண்டையை பிளக்கிறது. கண்கள் மெல்ல திறந்ததும், அம்மா என் முகத்தை பார்த்து அழுதுகொண்டே, "சாலம்மா! தம்பி கண் முழிச்சுட்டான். டாக்டர  வர சொல்லுங்க!" என்று கூறியபடி ஓடினார். இப்போது இருப்பது மருத்துவமனை என்று புரிந்தது. கடைசியாய் காதரின் அடி விழுந்தது மட்டும் நினைவுக்கு வந்தது! மிகுந்த வலியுடன் தலையை சற்று திருப்பினேன். அங்கே அந்த திருநங்கை நந்தினி நின்றிருந்தாள். "சீ! இவள் என்ன செய்கிறாள் இங்கே?" என்று கேட்க தோன்றிய நேரம் அம்மா டாக்டருடன் உள்ளே வந்தார்.

என்னை சோதித்த மருத்துவர், "இனி பயப்பட ஒன்னும் இல்ல! உங்க பய்யன் இப்போ ஆல் ரைட் அம்மா! ஒரு வாரம் இங்க இருந்தா போதும். நேரத்துக்கு மருந்துகளை குடுங்க! காயம் ஆறிடும் சீக்கிரம். பெட் ரெஸ்ட்ல இருக்கணும்." என்று கூறிவிட்டு, "டேக் கேர்" என்று கூறிவிட்டு சென்றார்.

ஆதரவாக என்னருகே வந்த அம்மா, "நாசமா போறவன். அந்த படுபாவி உன்னை அடிச்சதும் மயங்கிட்டே! இந்த நந்தினியும் அவளோடு இருக்க புள்ளைங்களும் பார்த்துட்டு, அடுத்த அடி விழறதுக்குள்ள பாஞ்சு வந்து அவனுகள தடுத்து அடிச்சு துரத்திட்டு உன்னை ஆஸ்ப்பித்திற்கு கொண்டு வந்துருக்குதுங்க! இந்த ஜனங்களும் உதவ வரல. ரத்தம் நிறைய போய்டுச்சு! இந்த பொண்ணு தான் பிளட் பேங்க் போய்,  எல்லாம் பண்ணுச்சு!" என்று அவள் பக்கம் திரும்பி, "ரொம்ப நன்றிம்மா!" என்றார்

"அம்மா! இதுக்கென்னமா நன்றி-ளாம்! நம்ம அண்ணன அடிச்சா விட்ருவோமா? அவனுகள போலீஸ்ல பிடிச்சு குடுத்துட்டோம், இப்போ கொலை முயற்சி கேஸ் போட்டாங்களாம். அப்பா சொன்னார். அவனுங்க வெளிய வர முடியாது. இனி ஒன்னும் பிரச்சனை இல்ல. அதான் அண்ணன் நல்ல படியா கண்ணு முழிச்சுட்டர்ல. அது போதும்மா" என்றாள்.

நான் வெறுத்த இந்த திருநங்கைகள் என்னை காப்பாற்ற போராடி இருக்கிறார்கள். இவர்கள் குறை மட்டுமே தெரிந்த எனக்கு இப்போது அவர்கள் வீரமும், ஈகையும், அன்பும் புரிந்தது. வெளித் தோற்றத்தைக் கண்டு அவர்களை வெறுத்தது எவ்வளவு பெரிய தவறு. உண்மையில் கண்ணெதிரே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடிய இதல்லவோ ஆண்மை!

அப்போது உள்ளே வந்த சாலம்மா, " நந்தினி! போய்  சாப்பிடும்மா! நேத்துலர்ந்து சரியா சாப்பிடவே இல்லயே" என்றார். அவளும், "சரிம்மா! அண்ணன பார்த்துக்கோங்க" என்றுவிட்டு கிளம்பியவள், திரும்பி என்னை  பார்த்து "அண்ணா! நான் வரேன்!" என்று சிரித்தாள்.

முன்போல் அவளை பார்த்தபோது இருந்த வெறுப்பு இப்போது இல்லை. மாறாக நன்றி மட்டுமே தோன்றியது. இதுவரை அவர்கள் மேல் இருந்த தவறான பிம்பம் கானல் நீராய் மறைந்து கண்கள் பணிக்க, சிறு புன்னகையுடன் நான் மெதுவாக தலை அசைத்து விடை அளித்தேன் என் தங்கைக்கு!