Sunday, October 18, 2015

பரிணாமம்

இதோடு பத்தாவது முறையாக கண்ணாடியை பார்த்துவிட்டேன். இத்தனை நாளாய் செய்த அழகு குறிப்புகள் வீண் போகவில்லை. என் முகத்தின் மலர்ச்சி எனக்கே புதிதாய் தெரிந்தது.  அலுவலகத்தில் தீபஒளி திருநாள் கொண்டாட்டத்தின்போது இதே சிகப்பு குர்தாவும், தங்க ஜரிகை போட்ட வெள்ளை வேட்டி அணிதிருந்தபோது, "யு லுக் கிரேட் இன் திஸ் டிரஸ்" என்று அமெரிக்கரான ராபின் பாராட்டிய அன்று வெற்று சிரிப்பே பதிலாய் இருந்தது. ஏதோ நினைவு வந்தவனாய் பெட்டியில் இருந்த அந்த  பழைய சட்டையை எடுத்து தடவிப்பார்த்தேன், சிலிர்ப்பாய் இருந்தது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன் தொட்டபோது இருந்த அதே சிலிர்ப்பு!

நேற்று இரவு நந்தாவின் அலைபேசி அழைப்பிலிருந்தே எனக்குள் பரபரப்பு தொற்றிகொண்டது. அவன் பிரேமுடன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. பிரேம் என்னைப் பார்க்க வருகிறானா? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. அதன் பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இல்லை! இல்லை! அப்படி ஒரு சந்தர்பத்தை எதிர் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

மணி பார்த்தேன். பண்ணிரண்டடிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கிறது. இன்னும் நாற்பத்தைந்து  நிமிடங்களில் வந்து விடுவார்கள். சமையலும் முடித்தாகிவிட்டது. கோழி சூப், இறால் பிரியாணி, நெய் சாதம், சிக்கன் தந்தூரி, வஞ்சிரம் மீன் வறுவல், மசாலா முட்டை, வெள்ளரிக்காய் தயிர் பச்சிடி, காரட் ஹல்வா என அனைத்தும் பிரேமுக்கு பிடித்தது. "இந்த சமயலுக்காகவே  உங்கள கல்யாணம் பண்ற பொண்ணு லக்கி" என்று அலுவலக தோழிகள் வம்பிழுக்கும்போது, 'அப்படி ஒருத்தி என்னை கல்யாணம் பண்ணா அவ ரொம்பவே அன்லக்கி' என்று சொல்ல தோன்றும். சற்றே அயர்ச்சியாய் உணர அந்த பழைய சட்டையை தடவியவாறே வரவேற்பறையின்  ஊஞ்சலில் கண்மூடி சரிந்தேன்.

"பிரேம்!". ஒரு காலத்தில் சிவநாமத்தை விட அதிகமாக பாராயணம் செய்த பெயர். தேனை தோற்கடிக்கும் தித்திப்புடன் இருப்பதாக உணர்ந்த பெயர். யாருக்கும் தெரியாமல் என் பெயரோடு பலமுறை எழுதி அழகு பார்த்த பெயர். அந்த பேருக்கு சொந்தக்காரன்தான் என்னை எப்படி மாற்றினான். இன்று என்னுடைய வளர்ச்சியில் அவனுக்கும் ஒரு பங்குண்டு என்று சொல்லும் அளவிற்கு என் வாழ்வில் முக்கியமானவன்.

சற்றே பெண்ணின் சாயலுடன் இருந்த என்னை அலங்காரம் செய்து அழகு பார்த்த அத்தையும், பாட்டியும், சித்தியும் மூன்றாம் பாலினத்தை கொச்சையாக கூப்பிடும் வார்த்தைகளை சொல்லி கொக்கரிகும்போது அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதை உணராமல் ஆடியும் பாடியும் அவர்களை சிரிக்கவைப்பேன். அந்த சமயங்களில் என் அம்மாவின் கலங்கிய கண்கள் பின்னாளில் அவர் வலியை உணரச்செய்தது. பாவம்! என்ன தான் இரண்டு முதுகலை பட்டம் பெற்று அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினாலும், பெண்ணே பெண்ணை அடிமையாக்கும் உன்னத சமுதாயத்தின் அடையாளமாக, பிறந்த வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த மருமகள் - படிப்பு வாசனை இல்லாத கணவன் வீட்டுப் பெண்களை எதிர்த்து பேசவா முடியும்?

இருக்கும் பிரச்சனை போதாதென்று, பத்தும் பத்தாததற்கு பத்து வயதில் இருந்தே பார்வை குறைபாட்டால் போட்ட தடி மூக்கு கண்ணாடியும் சேர்ந்துகொள்ள கேட்கவா வேண்டும்? அண்ணன்கள், சொந்தங்கள், நண்பர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள், பள்ளி ஆசிரியர்கள் என பாகுபாடில்லாமல் அனைவரது கேலிக்கும் ஆளாகி மனம் நொறுங்கும் நேரம் என்னை அரவணைத்து அம்மா கூறிய வாழ்வின் தடைகளை மீறிய வெற்றி வீரர்களின் கதைகள் தன்னம்பிக்கை விதையை தூவி வாழ்வின் தடைகளை எதிர்த்து போராட கற்றுக்கொடுத்தது.

பிறரிடம் பேசினால்தான் இந்த கேலியும் கிண்டலும் என்று பள்ளியில் பெரும்பாலும் மற்ற மாணவர்களுடன் பேசுவதை தவிர்த்தேன். வீட்டிலும் புத்தகமும் கையுமா இருக்க தொடங்கினேன். அப்படியும் கிண்டலும் கேலியும் நின்ற பாடில்லை. ஆண்கள் பள்ளியில் படித்த நான் சம பால் ஈர்ப்பு கொண்டவனாக உணர்தபோதும், பேருந்துகளில் பெரிசுகள், உறவுக்கார மாமா, சின்ன சித்தப்பா, ஆசிரியர்கள், உடன் படித்த மாணவர்கள் என சிலரின் இரட்டை அர்த்த கொச்சையான பேச்சுகளாலும், தவறான சீண்டல்களாலும் ஏற்பட்ட   குழப்பங்களை பெரிது படுத்தவில்லை. கல்வி ஒன்றே வாழ்க்கைப் படகை செலுத்தும் துடுப்பு என்ற அம்மாவின் தூண்டுதலால் படிப்பில் கவனத்துடன்இருந்தேன். நல்ல மதிப்பில் தேறி சிறந்த பொறியியல் கல்லூரியல் சேரும் வாய்ப்பும் கிடைத்தது.

அங்குதான் என் மகிழ்ச்சியும், வேதனையும் எல்லை மீற போகிறது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த கல்லூரி என் வீட்டில் இருந்து 40 கி.மி. தூரத்தில் இருந்தது. அது இருபாலர் படிக்கும் கல்லூரி. முதல் நாள் வகுப்புகள் தொடங்கியது. கால மாற்றத்தால் என் குடும்பம் பணக்கஷ்டத்தில் இருந்ததாலும், பாலீர்ப்பு ரீதியிலான குழப்பங்களும், அம்மாவை தவிர பொதுவாக வேறு பெண்களுடன் பழகாததும் சேர என் வகுப்பில் பெரும்பாலும் வசதியாகவும், மிடுக்காகவும் இருத்த பையன்களுக்கும், பெண்களுக்கும் மத்தியில் சதை பிடிப்புடன், தடி கண்ணாடியும், எண்ணெய் வழியும் முகமும், சாதாரண உடையுடன் இருந்த நான் வேற்று கிரக வாசியாய் தெரிய கடைசி இருக்கையை தேடி அமர்ந்தேன்.

அறிமுகப்படலத்தின்போது தயக்கத்துடனேயே வட சென்னை என்றதும், "ஓ! நார்த் மெட்ராசா???" என்று வினயமாக சிரித்த ஆசிரியர் மேலும் என்னை குறுக வைத்தார். இடைவேளை மணி அடித்தது. எங்கு செல்வது என்று கூட தெரியாமல் விழித்துக்கொண்டு வெளியே வந்தேன். ஆண்கள் கழிப்பறை தேடி சென்று இயற்கை உபாதைக்கு விடைசொல்லிவிட்டு வகுபிற்க்குள் நுழைந்த என்னை பார்த்து முன் வரிசை பெண்கள் முனுமுனுத்து சிரித்தது கூட வலியை  கூட்டியது.

மின்விசிறிக்கு கீழே அமர்ந்தும் புழுக்கம் குறைந்த பாடில்லை. மனப்புழுக்கதிற்கு இந்த விசிறி என்ன செய்யும்! பசி வேறு சேர்ந்துகொள்ள உணவு இடைவேளைக்காக மனம் ஏங்கியது. மணி அடித்ததும் பெரும்பாலானவர்கள் வெளியே சென்றார்கள். அம்மா கொடுத்த உணவை உண்டு முடித்து நிம்மதி பெருமூச்சுடன் கை கழுவிட்டு வந்தேன். மதிய வகுப்புகள் தொடங்க நேரம் இருக்கிறது, நூலகத்திற்கு செல்லலாம் என்று வெளியே வந்த என்னை, "ஹாய்!" என்ற கம்பீரமான ஆணின் குரல் நிறுத்தியது.

இந்த உலகத்தையே மறக்கவைக்கும் அழகு தேவன் அங்கே நின்றான். ஆறடி இரண்டங்குலம் உயரமும், கோதுமை நிறமும், சுருட்டை முடியும், வசீகர கண்களும், கூரான நாசியும், சிவந்த உதடுகளும், முறுக்கேறிய கைகளும், பரந்த முடி நிறைந்த மார்பும், குறுகிய இடையும், பெருத்த தொடையும் என மன்மதனின் பிம்பமாய் என் முன்னே நின்றுருந்த அந்த இளைஞன் நீட்டிய கையை மடக்காமல், "ஹாய்! ஐ எம் பிரேம்!" என்றான். சற்று நிதானித்த நான், "ஹாய்! ஐ எம் பிரபு! என்று கை குலுக்கினேன். வயதின் ஆண்மை திமிறல் அவன் கையின் ஸ்பரிசத்திலும் உணர முடிந்தது. "நைஸ் டு மீட் யு!, நானும் நார்த் மெட்ராஸ் தான்", என்ற கூறிய பிரேம் என் தோள் மீது அவன் இடது கை வைத்தான். தயக்கத்துடன் அவன் கையே விட்டுவிட்டு விலகிய நான், "ஓ! அப்படியா?" என்றேன்.

பள்ளி, வீடு என அவன் அடுக்கிய கேள்விகளுக்கு உதடு பதில் சொன்னாலும், மனது அவனை ரசித்துக்கொண்டுதான் இருந்தது. காவல் துறை அதிகாரியின் மகனாம் அவன். இவனுடைய கம்பீரத்தின் காரணம் புரிந்தது. அவன் தந்தையின் பிம்பமாய் இருக்கிறான். இவன் மட்டுமென்ன? காக்கி உடுப்பில் கட்டான வெள்ளித்திரை கதாநாயகர்கள்கூட இவன் முன் தோற்று போவர்கள்.

வகுப்பு மணி அடித்தது. உள்ளே சென்று அமர்தேன். அவன் என்னருகில் வந்து உட்கார்ந்து, "வா பிரபு! முன் பெஞ்ச்ல உட்காரலாம்" என்றான். "வேணாங்க! இங்கேயே இருக்கேன்" என்றேன் நான். "ச்சே. என்ன வாங்க போங்கனு. டா போட்டு பேசு" என்று கூறிவிட்டு அவனருகே உட்கார செய்தான். அவன் பக்கத்தில் இருந்த சாமும், நித்யானந்தமும் என்னை கவனிக்கக்  கூட இல்லை.

அடுத்த நாள் என் நந்தா அறிமுகமானான். சென்னையை அடுத்த திருவள்ளூரில் பிறந்து வளர்ந்தவன். கிரமத்து முரட்டு அழகன். வசதி இருந்தாலும், பெரும்பகுதியை கிராமத்திலேயே கழித்ததால் அவனும் என்னைப் போலவே உணரத்தான் போலும். அவனோடு உட்காருமாறு கூறினான். பிரேமிடம் கூறியபோது என்னுடைய அந்நியத்தை உணர்த்தவனாய், "சரி" என்று மெலிதாக சிரித்தான்.

நந்தா நல்ல நண்பனாய் அமைந்தான். இதனை நாட்கள் கிடைக்காத நட்பின் ஆழத்தை ஆறே மாதத்தில் கிடைக்க செய்தான். அன்புடன் என்னை கவனிப்பான். என்னிடம் போதுமான பணம்  இல்லை என்றாலும், அவனே செலவு செய்வான். எனக்கு பிரியாணி பிடிக்கும் என்பதால் கல்லூரி விடுதியின் டோக்கன் தீர்வதற்குள் வாங்க ஓடுவான்.  அணைத்து உதவிகளையும் கேட்காமலே செய்யும் அவனை என்ன சொல்வது? என்னை யாரும் கிண்டல் செய்தால் உண்டு, இல்லை என்று செய்து விடுவான். இவன் பேச்சுக்கு பயந்து அந்த முதல் வரிசை அழகிகள் அடக்கியே வாசித்தார்கள்.

பிரேமும் அவன் பங்கிற்கு அனைத்தையும் செய்வான். பெரும்பாலும் அவன் நண்பர்களுடன், அல்லது எங்கள் வகுப்பின் அழகி ராகினியுடன் உணவகத்திற்கு சென்றுவிட்டு  வரும்போது தின்பண்டங்கள் வாங்கி வருவான். பிறந்தநாளுக்கு சட்டை வாங்கி கொடுத்தான். நிறமோ, அளவோ எனக்கு பொருந்தவில்லை. ஆனாலும் அது பிரேம் கொடுத்தது. அளவு சரி செய்து உடுத்தினேன். பட்டுப்பீதாம்பரங்கள் கொடுக்காத ஒரு பெருங்கிளர்ச்சி என்னுள் அலைமோதியது. நந்தாவின் நட்பின் ஆழமும், பிரேமின் மீது என்னுடைய ஈர்ப்பும், அவன் காட்டிய கனிவும் சேர்ந்து என் இறந்தகால கசப்பு மறந்தே போனது.

நாட்கள் வேகமாய் ஓடியது. முதல் வருடம் அரையாண்டு தேர்வுகள் கிடையாது. ஓராண்டு பாடங்கள் மொத்தமும் சேர்த்து முழு ஆண்டு தேர்வு நடக்கும். பிரேம் படிப்பில் சற்று மந்தம்தான். அதனால் அவனுக்கு நான் என்னுடைய நோட்ஸ், ரெகார்ட்ஸ், அசைன்மெண்ட் என அனைத்தையும் கொடுத்து செய்ய வைத்தேன். இவனுக்காகவே அனைத்தையும் நேரத்திற்கு முன்பாகவே முடிப்பேன். தேர்வுக்கு முன் முப்பது நாட்கள் விடுப்பு இருந்தது. அப்போது பிரேம் வீட்டுக்கு சென்று படிக்க உதவினேன்.

அவ்வபோது பிரேமின் ஸ்பரிசங்கள் என்னை சுகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. இரவு நேரத்தில் வீட்டில் எல்லாரும் தூங்கியதும் பிரேமின் பெயரை எழுதியும், அவன் உருவத்தையும் வரைந்தும் என் ஏக்கத்தை தீர்த்துக்கொண்டேன். இரவு நேரங்களில் பெரும்பாலும் இந்த காகிதங்கள்  அடங்கிய கோப்புகள் என்னுடைய படுக்கையை பகிரும். மூன்றாண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு பாதியும்  முடிந்தது. படிப்பில் முதல் நிலையில் இருந்ததால்  ஆசிரியர்களின் அன்பிற்கும், மாணவர்களின் மதிப்பிற்கும் பாத்திரமானேன்.

இப்படியே இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அன்று நந்தா ....

------------------------------------------------------------------------------------------------------------------------

பொறியியல் படிப்பின் நான்காமாண்டில் தேர்வுகளோடு ஆறு மாதத்திற்கு ஒன்று என, இரண்டு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். வழக்கம் போல பிரேமுக்காகவும் சேர்த்து நான் அவற்றை தயார் செய்துகொண்டு இருந்தேன். நந்தாவும் சிலநாட்கள் படிக்க என் வீட்டுக்கு வந்து தங்குவான்.

அப்படி ஒருநாள் நந்தாவும் நானும் என் வீட்டில் எங்கள் ப்ராஜெக்ட் தயார் செய்துகொண்டு இருந்தோம். திடீரென்று நந்தா வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று கூறியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இரவு வேளையில் புற நகர் ரயிலில் அவனை அனுப்ப எனக்கு அவ்வளவு பிடித்தமில்லை என்றாலும் அவன் பிடிவாதமாக கிளம்பினான். ரயில் நிலையம் வரை கூட என்னை வர வேண்டாம் என்று கூறிவிட்டான். சரி! பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் ஏதும் கூறவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் பிரேம் பற்றி நான் சேர்த்துவைக்கும்  அந்த கோப்பு  காணமல் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடம் கிடைத்தாலும் கஷ்டம்தான். ஓரிரு நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. பயத்தின் ரேகைகள் என் முகத்தில் தெரிந்தது போலும், அம்மாவும், அப்பாவும் கேட்ட கேள்விகள் இன்னும் பயத்தை கூட்டியது.

அடுத்த வாரம் கல்லூரியில் நந்தா சரியாய் பேசவில்லை. ஏற்கனவே பயத்தில் இருந்த என்னை இதுவும் சலனப்படுத்தியது.  ஒருநாள் வகுப்புப்கள் முடிந்ததும் நந்தா என்னிடம் பேசவேண்டும் என்று கூறி கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து சென்றான். அவன் என்னை கேட்ட கேள்வி என்னை ஒரு நொடியில் வியர்க்க வைத்தது. "நீ பிரேம லவ் பன்றியாடா?" என்று கேட்ட அவனின் கண்கள் என்னைப்  பார்த்த பார்வை என்னை நிலைகுலைய வைத்தது. ஒரு நமிட மௌனத்திற்கு பிறகு அவனே தொடர்ந்தான்.

"உன் வீட்டிலே போன வாரம் புக்ஸ் தேடும்போது அந்த பைல் கெடைச்சுதுடா. உன் வீட்டுல யார் கைலயாவது கெடைச்சா உனக்கு கஷ்டம்னு நான் கொண்டு வந்துட்டேன்டா. உன்னையும், உன் நிலைமையும் புருஞ்சுக்க எனக்கு டைம் வேணும்னு உன்கிட்ட உடன பேசலடா. சாரி" என்றான். என்ன சொல்வதென்று தெரியாமல் பணித்து இருந்த என் கண்களை துடைத்த அவன்,
"உன் நிலமை எனக்கு புரியுதுடா. ஆனா எல்லாரும் புரிஞ்சுக்க மாட்டங்கடா. அதனால படிச்சு வேலைக்கு போற வரைக்கும் உன்னை பத்தி யார் கிட்டயும் சொல்லிக்காத. இந்த பைல் கூட உன் காலேஜ் லாக்கர்லே இருக்கட்டும். ஜாக்கிரதையா இரு. பியுச்சர் அபெக்ட் ஆகமே பார்த்துக்கோடா" என்று ஆதரவாய் என் கையை தன் கையில் வைத்து மற்றொரு கையால் பிடித்தான்.

இந்த உலகில் என் அம்மாவுக்கு பிறகு என்னை அப்படியே ஏற்றுக் கொண்ட உயிர் இவன். கண்ணீர் பெருக அவன் கையை எடுத்து கண்களில் ஒற்றிகொண்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு நந்தாவின் பாசம் பல மடங்கு கூடியது. "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!" என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டு என் நந்தா.

மனமென்னும் குரங்கு எப்போதும் போல தாவத் துவங்கியது. பிரேமும், நந்தா போலே என்னையும் என் காதலையும் ஏற்றுக்கொண்டால் இந்த உலகத்தில் நான்தான் மிகவும் அதிருஷ்டம் செய்தவன் என்று கனவு கண்டேன். பிரேமுடன் அந்த ராகினியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பற்றிக்கொண்டு வரும். என்ன செய்வது? அழகு சிலையான அவள் எங்கே, அசமஞ்சம் நான் எங்கே? ஆனாலும் பிரேம் என்னிடம் வாஞ்சையாய் இருப்பது போதும் என்று என்னை தேற்றிக்கொள்வேன்.

கல்லூரி விழாவிற்கு இன்னும் நாண்டு நாட்கள்தான் இருக்கிறது. பெரும்பாலான இறுதியாண்டு மாணவர்கள் அந்த வேளைகளில் மும்முரமாக இருந்தார்கள். வழக்கம் போல என்னிடம் இரண்டு பொறுப்புகள் இருந்தது. ஒன்று என்னுடையது, மற்றொன்று பிரேமின் கணினி விளையாட்டு நிகழ்சிகள். நான் எடுத்துக்கொண்டே தொழில்நுட்ப கண்காட்சி ஏற்ப்பாடு முடிந்த நிலையில் பிரேமின் நிகழ்சிக்காக அன்று கல்லூரி கணினி கூடத்திற்கு சென்று விட்டு வகுப்பிற்கு வந்து கொண்டிருந்த என்னை அங்கே எழுந்த சிரிப்பு சத்தம் நிறுத்தியது. பொதுவாக யாரையும் பொருட்படுத்தாத நான் அன்று ஏனோ கதவின் வெளியே நின்று கவனித்தேன்.

அந்த நாள்தான் என் வாழ்வின் எல்லா தோல்விகளை, ஏமாற்றங்களை, அவமானங்களை விட மோசமான ஒன்றை எதிர் கொள்ளப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் மனதில் ஆழ பதிந்த என் பிரேம், வலியின் எல்லையை உணரச் செய்த நாள் அது. வாழ்வின் எந்த நிலையிலும் எதிர்த்து நிற்கும் பலத்தை நான் உணர்ந்த நிகழ்வு அது.

------------------------------------------------------------------------------------------------------------------------

அன்று பிப்ரவரி 14, 2004.

"என்னடா பிரேம்? உன் வேலையெல்லாம் முடிஞ்சுதா?" என்ற  குரல் சாமுடையது. "அவனுக்கென்ன? அவனுடைய பூதம் இருக்குது. எல்லாத்தையும் செஞ்சுடும். அலாவுதீன் பூதம் கூட விளக்க தேச்சா தான் வரும். இவன் பூதம் நெனைச்சா போதும். வந்து அசைன்மெண்ட், நோட்ஸ், லேப் வொர்க், ரெகார்ட், எக்ஸாம் பிரிபரஷன்எல்லாமும் செயும்டா... இப்போகூட இவன் கேம்ஸ் ப்ரோக்ராம்காகே லேப் ரெடி பண்ண போய் இருக்கு. இப்போவே இவன் தீசிஸ் ரெடி பண்ண அலையுதுடா" கூறிவிட்டு நித்யா சிரித்தான். அவனுடனே சில பெண்களும் பலமாக சிரித்தார்கள். பிரேமும் சிரித்து கொண்டு இருந்தான். அவன் குரல் எனக்குத் தெரியாதா என்ன?

அவர்கள் பேசியதை விட, என் பிரேம் அதை ரசித்து சிரிப்பது என் கண்ணீரை அருவியாய் வழியச்  செய்தது. மேலும் அவர்கள் கூறியது இடியாய் என்னுள் இறங்கியது. சாம், "பிரேம்! நீ அப்பப்போ போட்ட எலும்புக்கு செமைய வாலட்டுது போல", சிரித்த அவன் தொடர்ந்து, "நித்யா! இவனும் ராகினியும் வாங்கிட்டு சாபிடாம கொண்டு வந்து தர்றத என்னமோ அவனுக்காகவே வாங்கிட்டு வந்ததா நினைச்சு சாப்டுவான். எல்லாத்துக்கும் மேலே இவனுக்கு பிடிக்காத ஷிர்ட அவன் பர்த்டேக்கு குடுத்தான். அத கூட வாங்கி போட்டுகிச்சு. இன்னைக்கு கூட அதைத்தான் போட்டுருக்கு. அல்பம்!" என்று சிரித்தான். கண்களில் உடையாய் நீர் வழிய, உடல் முழுதும்  கம்பிளி பூச்சி ஊர்வதை உணர்ந்தேன்.

நித்யா, "அவன நீ?" என்று கூறியதும் சிரிப்பு பல மடங்கு அதிகமானது. பிரேம் "ச்சே! காலேஜ் பர்ஸ்ட் டே. நான் ராகினியை பார்க்க அவன் பெஞ்ச் கரெக்டா இருதுச்சு. பேச்சு கொடுத்தேன். ராகினியும் பார்த்தா. சேம் ஏரியா வேற. சும்மா கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன். அவ்ளோதான்.  அவன் ஹெல்ப் பண்றதுலே நம்ம எல்லாரும் தானே ஓபி அடிக்குறோம்" என்று கூறினான். "என்னமோ. அவன் உன்னை லவ் பண்றான் போல. பார்த்துடா! இன்னைக்கு பிப் 14. ரோஸ் குடுத்துட போறான்" என்ற சாம் மலை போன்ற சரிரம் குலுங்க சிரித்தான் போலும். புரையேறி இருமத் தொடங்கினான்.

கண்களை திடைத்துக்கொண்டேன். ஏனோ அன்று எனக்கு மேலும் அழவோ அந்த இடத்தை விட்டு போகவோ தோணவில்லை. பிறர் மனம் நோக பேசும் இவர்கள் இங்க இருக்கும்போது, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் வேண்டும் நான் ஏன் போக வேண்டும். போனால் மட்டும் என்ன மாறிவிடும். எது நடந்தாலும் முன்னே போவது நல்லது என்று எண்ணி மற்றவர்கள் சிரிப்பு அடங்குவதற்குள் நான் உள்ளே நிழைந்தேன்.

உள்ளே பிரேம், சாம், நித்யா, ராகினி தவிர அந்த முன் பெஞ்ச் அழகிகள் இருவரும் இருந்தார்கள். சிறிது தயங்கிய பிரேம் "ஹே! எல்லாம் ரெடியா?" என்று கேட்டான். "ம்!" என்றேன். "சரி வா. நான் வீட்டுக்கு போறேன். கார்ல போலாம்" என்று அழைத்தான். இதற்கு முன்னே அவன் இப்படி அழைத்தபோது, விண்வெளிக்கே செல்வது போல மகிழ்ச்சியுடன் சென்றேன். இப்போது அது பிண ஊர்தியாகப்பட்டது. "இல்ல. நந்தா கூட தீசிஸ் விஷயமா போகணும். பை!", அவன் முகம் பார்காமலே கூறிவிட்டு வெளியேறினேன். சிரிப்பு சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து இருந்த என்னை பார்த்த நந்தா, "எங்கெல்லாம் தேடுரதுடா உன்ன? என்ன பண்ற இங்க? வா போலாம்." என்று கூறியாவாறு அருகில் வந்தான். கண்ணீர் கோடுகளுடன் என்னைப்  பார்த்தது, "என்ன? உன்னை பத்தி கமெண்ட் அடிச்சத கேட்டியா? " என்று கேட்டது ஆச்சர்யமாக இருந்தது. பதிலேதும் கூறாமல் இருந்த என்னைப் பார்த்து, "உன்னை பத்தி அவங்க கமென்ட் பண்றது எனக்கும் தெரியும்டா. பிரேம கேட்டப்ப இது உனக்கு வேண்டததுன்னு சொன்னான். எனக்கும் அவனுக்கும் பிரச்சனை ஆயிடுச்சு. நான் அவனோடு இப்ப பேசறதில்ல. இதைப் பத்தி நான் சொன்னா, நீ ஏதோ உன்னை அவன் கிட்ட இருந்து நான் பிரிக்கிறேனொன்னு  நினைச்சுட கூடாதுன்னு சொல்லலே. சாரி!" என்றான்.

நந்தாவை சில நொடிகள் உற்று பார்த்தேன். எனக்காக எல்லாமும், எப்போதும் செய்பவன் என் எதிரே நிற்கும் என் அன்பு நண்பன். ஆனால் எனக்கு எல்லாமுமாக இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டவன்... அழுது ஓய்ந்து இருந்ததால் மனம் சற்று அமைதியாய் இருந்தது. "பரவலடா. வா சாப்டலாம். பசிக்குது" என்று எழுந்த என்னை புரியாமல் பார்த்து நந்தாவும் எழுந்தான். ஏதோ நினைவு வந்தவனாய், "கொஞ்சம் லேப்ல வேலை இருக்கு. முடிச்சுட்டு போலாம்", என்று நடந்தேன். உணவு விடுதியில் பிரேமுடன் சாமும், நித்யாவும் இருந்தார்கள். பிரேமிடம் சென்று, "தீசிஸ் ரெடி பண்ணி ஈமெயில் அனுபிட்டேன், பார்த்துட்டு சொல்லு. வரேன்", பதிலுக்கு காத்திருக்காமல் நந்தாவுடன் வெளியேறினேன்.

அவன் என்னை எப்படி நினைத்தால் என்ன? நான் செய்வதை செய்துவிட்டேன். மனது சற்று நிம்மதி அடைந்தது. என்னை நன்றாக புரிந்திருந்த நந்தா இதைப்பற்றி கேட்டகூடவில்லை. மீதம் மூன்று மாதங்கள் பறந்தது. தேர்வுகள், தீசிஸ் என ஓடிவிட்டது. கல்லூரி கடைசின் நாளன்று  என்னைப் பார்த்த பிரேம், "தேங்க்யுடா. நீ செஞ்ச எல்லா ஹெல்புக்கும். உன்னாலேதான் இந்த நாலு வருஷம் நல்லா போச்சு. ரொம்ப தேங்க்ஸ்" என்றான். ஒரு சில நொடிகள் அவன் மேல் என் தீர்க்கமான பார்வையுடன், "நீ போட்ட எலும்புக்கு நல்ல வாலட்டினேனா? உன்னோட இந்த பூதம் செஞ்ச சேவைக்கு ஏன் தேங்க்ஸ் சொல்ற?" என்று உதட்டோர சிரிப்பு மாறாமல் கேட்ட என்னை சற்றே மிரண்டு பார்த்தான் பிரேம். அவன் மறுவார்த்தை கூறுவதற்குள், "ஆல் தி பெஸ்ட்!" என்று கூறவிட்டு திரும்ப நடக்க தொடங்கினேன். "பிரபு! பிரபு!" என்ற அவன் அழைப்பை கவனிக்காமல் என் நந்தாவை தேடி நடந்தேன். அதுதான் அவனை பார்த்தது கடைசி.

படித்து முடித்து உடனே வேலை கிடைத்தது. ஒரே வருடத்தில் அமெரிக்கா செல்லவும் வாய்ப்பு  வந்தது. இதற்கிடையில் கண்களுக்கு லேசிக் சிகிச்சை செய்ததால் கண்ணாடிக்கு தேவை இல்லாமல் போனது. கண்ணாடியில்லாமல்  என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை.

காலம் வேகமாய் ஓடியது. இதோ டாலர் தேசத்தில் கால் பதித்து பத்து வருடங்கள் முடிந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் கலாச்சார ஒப்பனை பூசும் நம்நாட்டில் இருந்து வந்த எனக்கு, இங்கே பெரும்பாலும் அவரவர் வாழ்க்கைய ஏற்று வாழும் முறை முற்றிலும் புதிதாக இருந்தது. என்னை நானே புரிந்து கொண்டு, முழுமையாய் என்னை ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

வேலை, உடற்பயிற்சி, வீடு, வார இறுதிகளில் முதுகலை பட்டய படிப்பு என்று நாட்கள் பறந்தது. தனி வீடு, மகிழ்வுந்து என பல வசதிகள் இருந்தாலும், தினமும் பேசும் அம்மாவின் குரலும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விடுப்பில் இந்தியாவில் இருப்பதும், ஆறு  வருடங்களுக்கு முன் நந்தா குடும்பத்துடன் என் வீட்டிலிருந்து ஐம்பது மைல் தூரத்தில் குடியேறியதும் என் தனிமையை போக்க உதவுகிறது.

நந்தா நாள் தவறாமல் அலைபேசியில் அழைப்பான். வார இறுதியில் வந்து செல்வான். இன்றும், அன்று இருந்த அதே கனிவு, பாசம் அவனிடம் இருந்தது. அவன் மகன்களையும், மனைவியையும் சில நாட்கள் அழைத்து வருவதுமுண்டு. அவன் மனைவி, "அண்ணா!" என்று அன்பு பாராட்டுவாள். குழந்தைகள் ஆதவனும்,ஆதித்தனும் "மாமா!" என்று என் கழுத்தைக்  கட்டிக்கொண்டுவிடாமல் விளையாடுவார்கள். அந்த மழலைகளின் சிரிப்பும், பேச்சும் வெறுமையாய் உணரும்போது ஆறுதலாய் இருக்கும்.

காதல், திருமணம் என்பது சம பால் ஈர்ப்பு கொண்டவர்களின் வழக்கையில் குறிஞ்சி பூ போல அபூர்வமான ஒன்று. அதற்க்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன? பிரேமுக்கு பிறகு காதல் என்ற ஒன்றை வேறு யாரிடமும் தேட என் மனம் விரும்பவில்லை. சிற்றின்பத்தை தோற்றுவிக்கும் மன அலைகள் மோதும் நேரங்களில் பழையநினைவுகள் பேரலையாய் வந்து அவற்றை அடித்து செல்லும். பிரேமின் நினைவு வந்தால் அந்த பழைய கோப்புதான் ஆறுதல். ஆரம்பத்தில் அவன் என்னை தொடர்பு கொள்ள சில சமயம் முயன்றான். பின் அதுவும் இல்லை. நந்தா அவனுக்கும் ராகினிக்கும் திருமணம்முடிந்து சென்னையில் இருப்பதாக சொன்னான். கல்லூரியின் கடைசி நாளன்று பார்த்த பிரேமை இன்றுதான் பார்க்கபோகிறேன்.

நந்தா முந்தினம் அழைத்து "பிரேம் யு. எஸ். வந்துருக்கண்டா. இங்கே என் சிட்டிகுதான் வந்துருக்கான். உன்னை பாக்கணும்னு எனக்கு போன் பண்ணி கேட்டான். எப்படியோ டிராக் பண்ணி இருக்கான். கூட்டிட்டு வரவா?" என்ற கேட்டதும் நம்ப முடியவில்லை. "சரிடா. அழசுட்டுவா" என்று நான் சொல்வேனென்று தெரியும் போலும், "நாளைக்கு பன்னண்டரை  மணிக்கு வருவோம்", என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அழைப்பு மணி பல முறை தொடர்ந்து அடித்ததால் நினைவலைகளிருந்து மீண்டு மணி பார்த்தேன். பன்னிரண்டு நாற்பத்தைந்து. நந்தாவாகத்தான் இருக்கும். என் வீட்டின் ஒரு சாவி அவனிடமும் இருக்கிறது. வீட்டில் மறந்து வைத்துவிட்டான் போல! கையில் இருந்த சட்டையை பெட்டியில் வைத்துவிட்டு, ஒருமுறை கண்ணாடியை பார்த்து முகத்தை துடைத்துவிட்டு கதவை நோக்கி நடந்தேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------

கதவை திறத்தும் நந்தா "ஹாய் டா! சாவியை மறந்துட்டேண்டா. ஏன் இவ்ளோ நேரம்? போன் கூட  எடுக்கல. உன் தங்கச்சி பால் கொழுக்கட்டை குடுத்துவிட்டா. டேபிள்ல வெக்குறேன்"என்று கூறியவாறு உள்ளே வந்தான். அவனை தொடர்ந்து உள்ளே பிரேம் உள்ளே வர அனுமதி வேண்டி என்னை பார்த்தபடி நின்றான். "உள்ளே வா, பிரேம்!" என்று கூறிய என்னை ஆழமாய் பார்த்தவாறே உள்ளே வந்தான். பத்து வருடங்கள் அவனை பெரிதாக மாற்றவில்லை. கண்ணாடி போட்டிருந்தான். கொஞ்சம் உடம்பு போட்டு இருந்தான். நிறம் சற்று குறைந்து இருந்தது. ஆங்காங்கே நரையும் இருந்தது. ராகினி சரியாக கவனிப்பதில்லை போலும். ஆனாலும் அவன் அழகாகவே தெரிந்தான். என் பிரேமாயிற்றே!

சில விசாரிப்புகளுக்கு பின் சாப்பிட அழைத்தபோது நந்தா "உன் தங்கச்சியையும் குட்டிகளையும் ஷாப்பிங் மால்ல விட்டுட்டு வந்துருக்கேன். நீங்க சாப்பிடுங்க! பிரேம் நைட் வந்து கூட்டிட்டு போறேன். பிரபு! ஏதும் வேணும்னா மெசேஜ் பண்ணுடா, நைட் வரும்போது வாங்கிட்டு வரேன்" என்று எழுந்தான். அவன் மகன்களுக்கு பிடித்த சிக்கன், மற்றும் கேரட் ஹல்வா எடுத்து வைத்து இருந்த டப்பாவை கொடுத்தேன். சிரித்து கொண்டே, "பசங்க வரணும்னுஒரே அடம்டா. அடுத்த வாரம் போலாம்னு சொல்லிட்டேன்" என்றான். "என் செல்லங்களை கூட்டிட்டு வா! பார்த்து ரொம்ப நாளாச்சு" என்று கூறி அவனை வழி அனுப்ப வெளியே வந்தேன். "பார்த்துக்கோடா. டோன்ட் கெட் எமோஷனல்" என்று எச்சரித்துவிட்டு போனான்.

உள்ளே வந்த எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. பிரேமின் ஆரம்ப கால அன்பும், பாசமும் பின்பு நடந்த கசப்பான நிகழ்வுகளின் நினைவுகளும், பல வருட இடைவெளியும் ஏதோ ஒரு தடையை உருவாக்கி இருந்தது. சில நிமிட மௌனத்திற்கு பிறகு அவனே கேட்டான். "ஆளே மாறிட்டே. காலேஜ் டைம் ல பார்த்த உன்னை இப்போ யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ மாற்றம். ஏன் பேஸ்புக், ட்விட்டர் எதுலேயுமே இல்ல நீ? சென்னைல வீடு மாறிடீங்க போல. அந்த பழைய வீட்டு போன் நம்பர் மாத்திடீன்களா? கல்யாணத்தப்போ கூட உன்னை காண்டக்ட் பண்ண முடில. இப்போதான் நந்தா நம்பர் கிடைச்சுது. இங்க ஒரு பிசினஸ் ட்ரிப் வந்தேன். பார்க்கணும்னு தோனுச்சு. நீ வேணாம்னு சொல்லுவ்யோனு நெனச்சேன்" என்று முடித்த அவனுக்கு என் பதில் வெறும் சிரிப்பாக மட்டுமே இருந்தது. 'முட்டாள்! உன் மேலே கோபம் இருந்தால் தானே வேண்டாமென்று சொல்ல?' மனதின் எண்ணங்களை விழுங்கிவிட்டு, "சாப்பிடலாமா?" என்று கூறி மேஜையை தயார் செய்ய எழுந்தேன்.

சாப்பிடும்போதும் பிரேமின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பதிலாக இருந்தது. பொதுவாகவே பேசுவதை குறைத்துவிட்ட நான் பெரும்பாலான கேள்விகளுக்கு சிரிப்பையும், 'ஆம்', 'இல்லை' என்று பதிலளிப்பது அவனுக்கு பழகிய ஒன்றுதான். அவனுக்கு பிடித்த அசைவ உணவுகள் செய்து இருந்ததால் ஒரு பிடி பிடித்தான். பாவம்! இங்கு வந்த இந்த இருபது  நாட்களில் சரியான சாப்பாடு இல்லையென்பது அவன் வேர்க்க விறுவிறுக்க சாப்பிடுவதிலிருந்தே இருந்தே தெரிந்தது. பிரேம் உண்டு முடித்ததும், "கேன் ஐ சுமோக்?" என்றான். பலகணியை காட்டினேன். 'புகை பிடிக்கிறான், குடிப் பழக்கமும் இருக்கும் போல', நெருடலுடன் உணவு மேஜையை சுத்தம் செய்ய தொடங்கினேன்.

அவன் உள்ளே வந்ததும் "கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்று விருந்தினர் படுக்கை அறையை காட்டினேன்.  உண்ட மயக்கம், உடனே படுத்துவிட்டான். நான் சமையலறையை சுத்தம் செய்ய தொடங்கினேன். பெரும்பாலும் பகல் தூக்கத்தை வீட்டு வேலைகள் மூலம் தவிர்க்கிறேன். விருந்தினர் அறைக்குள் சென்று குளிர்சாதனத்திற்கு உயிர் கொடுத்துவிட்டு, தூங்கும் பிரேமை பார்த்தேன். சட்டை இல்லாத வெற்று மார்புடன், முன்கேசம் நெற்றியில் விழ அழகான வளர்ந்த குழந்தை போல இருந்தான். சில நிமிடங்கள் பார்த்துவிட்டு நகர்ந்தேன். பல வருட ஏக்கத்தை சில நிமிட பார்வை தீர்க்குமா என்ன? இடையில் நந்தா அலைபேசியில் அழைத்து ஏதும் பிரச்சனை இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

பிரேம் இருட்டிய பிறகே பிறகு  எழுத்தான். முகம் கழுவி விட்டு வந்ததும் நான் கொடுத்த தேநீரை ஆவலாய் குடித்தான். அவன் தொலை காட்சியில் முழ்கி இருந்தான். நான் எனது அலுவலக வேலைகளை பார்த்துகொண்டு இருந்தேன். இருவருக்குமே பேச வேண்டுமென்று இருக்கிறது. ஆனாலும் ஏதோ தடை செய்கிறது. இரவு சிற்றுண்டி முடிந்ததும், பிரேம் வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான்.

மணி ஒன்பதரையை தொட்டுவிட்டது. நந்தா இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவான். பிரேமுக்க்காக நான் வாங்கி வைத்திருந்த கைக்கடிகரத்தை எடுக்க உள்ளே சென்றேன். "பிரபு! கொஞ்சம் இங்க வா!" என்றான். நான் ஊஞ்சல் பக்கவாட்டு கம்பியை பிடித்தபடி நின்றேன். "உன்னிடம் ஒன்னு கேக்கனும். கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. இன்னும் அரை மணி நேரத்தில நந்தா வந்துடுவான். இப்போ பேசலனா முடியாது. அதான் பேசிடலாம்னு" சற்று நிறுத்திய அவனை பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

என்னிடம் எதையும் கேட்க அவன் தயங்கியதே இல்லை. 'ஒருவேளை அன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்க போகிறானா?. பாவம்! எப்போதும் திமிராகவே வளர்ந்தவன். கம்பீரமாக இருக்கவே பழகியவன். ஆண்மையின் உருவமாக வளைய வந்தவன். மன்னிப்பு கேட்கமுடியாமல் தவிப்பது ஒன்றும் வியப்பானதில்லை.  'பரவாயில்லை டா. அன்னைக்கு நடந்தது பத்தி எல்லாம் பேசவேண்டாம். விடு - என்று சொல்லலாமா? வேண்டாம். அவனே சொல்லட்டும்'. மௌனமாக இருந்தேன்.

"நீ கேவா?" அவனது அந்த நேரிடையான கேள்வி எனக்கு பெரிய அதிர்ச்சியையோ, ஆச்சர்யதையோ தரவில்லை. "ம்" என்ற எனது பதிலால் மேலும் தொடர்ந்தான். "நந்தா பேசும்போது உனக்கு கல்யாணம் பண்ண விருப்பமில்லேனு சொன்னான். அதான் ஒரு கெஸ்ல  கேட்டேன். நானும் அப்பப்போ பசங்கள மீட் பண்ணுவேன். வீட்ல எல்லாத்தையும் ட்ரை பண்ண முடியாதே! ஜஸ்ட் டு ரிலாக்ஸ். சும்மா சொல்லகூடாது. எதாவது கிடச்சா போதும்னு பசங்களும் சொல்ற மாதிரி செய்வானுங்க" என்று கூறிவிட்டு நமட்டு சிரிப்புடன் என்னைப் பார்த்தான். அவன் கண்களில் துளியும் தயக்கமோ, குற்ற உணர்ச்சியோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பிறரை தன் சுயநலத்திற்காக பயன் படுத்துவதை இவன் இன்னும் விடவில்லை போலும். அதை விட, கிடைத்ததை அனுபவிப்போம் என்று தன்மானத்தை இழக்கும் நிலைக்கு தள்ளபடுகிற சமப்பால் ஈர்புடையோரின் செயல்கள் இன்னும் பாரத்தை கூட்டியது. எனக்குள் எழுந்த படபடப்பை உணராது மேலும் தொடர்ந்தான். "இங்க பசங்க கிடைப்பாங்களா? ரொம்ப நாளாச்சு. செம கட்டை ஒன்னு கெடைச்சா இருக்குற மூடுக்கு சூப்பரா இருக்கும். நீ கூட செய்வ இல்ல? வில் யு சக் மீ?" என்று கூறிவிட்டு என்னை பார்த்து கண்ணடித்தான்.

அவன் வந்ததிலிருந்து இப்போதுதான் அவனை கூர்ந்து பார்கிறேன். கண்களில் நட்போ அன்போ துளியும் இல்லை. கம்மம் மட்டுமே தெரிந்தது. அப்படியானால் இவன் நந்தா மூலமாக என்னை தேடியது இத்தனை  வருட நட்பை போற்றி அல்ல, இருபது நாட்களின் வெறியை  தணிப்பதற்குதான். அழகின்ரூபமாக இதனை நாளாக எனக்குள் ஆழப் பதிந்திருந்த பிரேம், இப்போது குரூரத்தின் மொத்த உருவமாக தெரிந்தான். கால்களுக்கு கீழே தரை நழுவ, கண்கள் இருட்ட, எதிரே இருக்கும் பிரேமின் பிம்பம் மறைய, கீழே விழும் என்னை கதவை திறந்து கொண்டு "பிரபுபுபுபு!" என்று அலறியபடி தாங்கிப் பிடிக்க என் நந்தா ஓடி வருவது மங்கலாக தெரியும் இந்த நொடியில், எனக்குள் தீனமான ஓலம் எழுகிறது...

------------------------------------------------------------------------------------------------------------------------














No comments:

Post a Comment